ரஜினிகாந்தின் பயோபிக் திரைப்படம் உருவாகிறது... ஸ்கிரிப்ட் பணிகள் தொடக்கம்
|நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிக்க உள்ளார். இவர் '83', 'சூப்பர் 30', 'கிக்' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக ரஜினிகாந்திடம் ஒப்புதல் கேட்டதாகவும் ஆரம்ப கட்ட பணிகளுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் பயோபிக் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்ததும் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.