70-வது தேசிய திரைப்பட விருது: சாய் பல்லவி ரசிகர்கள் அதிருப்தி
|சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக கிடைத்தது.
சென்னை,
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 70-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில், சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 தேசிய விருதுகளை 'பொன்னியின் செல்வன் 1' அள்ளியது.
மேலும், சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக கிடைத்தது. இதனையடுத்து பலரும் நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில், நடிகை சாய் பல்லவியின் ரசிகர்களும் உள்ளனர். இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தாலும், சாய் பல்லவி நடித்த 'கார்கி' அங்கீகாரம் பெறாதற்கு அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர் ஒருவர், "சாய் பல்லவி 'கார்கி' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற தகுதியானவர். நித்யா மேனனை குறை கூறவில்லை, ஆனால், 'கார்கி' படத்தில் சாய் பல்லவியின் பாத்திரம் 'திருச்சிற்றம்பலம்' ஷோபனாவின் பாத்திரத்தை ஒப்பிடும்போது மிகவும் கடினமானது, என்றும்
மற்றொருவர், 'கார்கி'க்காக சாய் பல்லவி தேசிய விருதுக்கு தகுதியானவர். திரைக்கதை, நடிப்பு என அனைத்துமே சிறந்த தரத்தில் உள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பால் ஏமாற்றம், என்றும் பதிவிட்டுள்ளனர்.