'ஓப்பன்ஹெய்மர்' படத்துக்கு 7 பாப்டா விருது
|‘பூவர் திங்க்ஸ்‘ திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த மேக்கப் மற்றும் சிகையலங்காரம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு என 5 விருதுகளை பெற்றது.
சர்வதேச அளவில் ஆஸ்கருக்கு அடுத்து பிரிட்டிஷ் திரைப்பட அகாடமியின் பாப்டா விருது சிறந்த சினிமா விருதாக கருதப்படுகிறது. 77-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஓப்பன்ஹெய்மர்' ஹாலிவுட் படம் 7 பாப்டா விருதுகளை கைப்பற்றியது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என 7 பிரிவுகளின் கீழ் விருதுகளை இந்த படம் அள்ளியது.
அணுகுண்டு விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. சிறந்த நடிகருக்கான பாப்டா விருதை சிலியன் மர்பியும், சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலனும் பெற்றுக் கொண்டனர். 'பூவர் திங்க்ஸ்' திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த மேக்கப் மற்றும் சிகையலங்காரம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு என 5 விருதுகளை பெற்றது. விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரபல நடிகை தீபிகா படுகோனேவும் பங்கேற்றார்.