< Back
சினிமா செய்திகள்
54வது சர்வதேச திரைப்பட விழா: ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு
சினிமா செய்திகள்

54வது சர்வதேச திரைப்பட விழா: ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

தினத்தந்தி
|
13 Oct 2023 4:15 PM IST

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவா,

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பனோரமா பிரிவில் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்றது. இதில், திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவாவின் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரி அனுராக் தாக்கூர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ்-க்கு, கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் , புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நாட்டின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டதாகும். மேலும், நமது செழுமையான சினிமா கலாசாரம் மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்த தெற்காசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு மைக்கேல் டக்ளஸ் அவரது மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் அவர்களது மகனை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்