தனுசின் 50-வது படம்
|தனுஷ் நடிக்க உள்ள 50-வது படம் பற்றிய அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது.
தனுஷ் 2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். ஆரம்பத்தில் காதல் கதைகளில் நடித்த அவர் பின்னர் அதிரடி கதாநாயகனாக மாறினார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தி கிரே மேன் படம் மூலம் ஹாலிவுட்டுக்கும் சென்றார். ஆடுகளம், அசுரன் படங்களில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
தற்போது தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும் தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார்.
இந்த படத்தை முடித்து விட்டு தனுஷ் நடிக்க உள்ள 50-வது படம் பற்றிய அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குவது யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் டைரக்டர் மற்றும் படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை விவரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனுசே இந்த படத்தை இயக்குவரா? அல்லது வட சென்னை 2-ம் பாகமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.