50 வயது மகளின் பிறந்த நாள்... நினைவலைகளை பகிர்ந்த அமிதாப் பச்சன்
|ஜல்சா பங்களாவுக்கு வெளியே ஞாயிற்று கிழமை தோறும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கம் கொண்ட நடிகர் அமிதாப் பச்சனுடன், இந்த முறை மகன் அபிஷேக்கும் ஒன்றாக தோன்றினார்.
புனே,
இந்தி திரையுலகின் நட்சத்திர தம்பதியான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன். இவருக்கு 50 வயது நிறைவடைந்து உள்ளது. இதனை பிரதீக்சா பங்களாவில் வைத்து அவருடைய குடும்பத்தினர் ஒன்றாக நேற்று கொண்டாடினர்.
அமிதாப் பச்சன் தன்னுடைய மகளின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த கால இனிமையான நினைவலைகளை அவருடைய பிளாக்கில் பகிர்ந்துள்ளார். அதில், குடும்பத்தின் அன்பு, வாழ்த்துகள் மற்றும் கொண்டாட்டம் நிரம்பிய ஒரு நாள்... பிறந்தநாள்கள் நிறைய வந்து விட்டன.
ஸ்வேதா, முதன்முதலில் பிறந்தவள். அதன்பின் நிகிலுடன் திருமணம்... ஓரிரு நாட்கள் கடந்தது போன்று இருந்தது. அதற்குள் 50 ஆண்டுகள் ஓடி விட்டன. எங்களுடைய முதல், சொந்த வீடு பிரதீக்சாவுக்கு ஸ்வேதாவை நாங்கள் கொண்டு வந்தோம். அப்போது, அவளுக்கு 2 வயது. அபிஷேக் பிறந்து சில மாதங்கள் இருக்கும்.
இதே வீட்டில், இதே மேஜையில் எல்லோரும் இருக்க அந்த நாளை கொண்டாடும் அவர்களை இன்று பார்க்கும்போது... வாழ்க்கை ஆச்சரியம் நிறைந்தது. குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர் என பதிவிட்டு உள்ளார்.
மும்பையில் ஜுகு பகுதியில் உள்ள இந்த பங்களாவை, 2023-ம் ஆண்டில் ஸ்வேதாவுக்கு அமிதாப் பச்சன் பரிசாக வழங்கினார். 2007-ம் ஆண்டில் இந்த பங்களாவில் வைத்தே, அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயின் திருமண நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து அமிதாப் வெளியிட்ட பதிவில், குடும்பம் என்பது ஒரு பெரிய பந்தம். அன்புக்குரியவர்கள் ஒன்றிணைந்தது மற்றும் ஒருவருக்கொருவரின் கொண்டாட்டங்கள் நிறைந்தது. அவர்களே முதன்மையானவர்கள் என தெரிவித்து உள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன், ஜல்சா பங்களாவுக்கு வெளியே ஞாயிற்று கிழமை தோறும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கம் கொண்டவர். இதன்படி, நேற்று ரசிகர்களை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்த தருணத்தில், அமிதாப்புடன், அபிஷேக்கும் கூடவே ஒன்றாக தோன்றினார்.
இதேபோன்று, ஸ்வேதாவுக்கு அவருடைய சகோதரர் அபிஷேக் மற்றும் மகள் நவ்யா நாவ்லி நந்தா ஆகியோரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ஸ்வேதாவுக்கு, 1997-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் நிகில் நந்தாவுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நவ்யா மற்றும் அகஸ்தியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.