< Back
சினிமா செய்திகள்
பிறந்தநாளில் 3 சிறப்பான விஷயங்கள்: மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட நடிகை லைலா...!
சினிமா செய்திகள்

பிறந்தநாளில் 3 சிறப்பான விஷயங்கள்: மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட நடிகை லைலா...!

தினத்தந்தி
|
24 Oct 2023 7:35 PM IST

நடிகை லைலா தனது பிறந்தநாளில் 3 சிறப்பான விஷயங்கள் குறித்து மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் நடிகை லைலா கள்ளழகர் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். பின்னர், கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும் பரமசிவன், சூர்யா உடன் நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே, விக்ரம் உடன் தில் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றார்.

கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரது சிரிப்புக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்த காலமும் உண்டு. இதன்பின்பு ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விட்டார். இதனால், நடிப்பு பக்கம் அவர் தலை காட்டவில்லை.

கடந்த 2022ம் ஆண்டு வெளியான 'சர்தார்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது நடிகர் விஜய்யின் 68வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று லைலா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளான இன்று மூன்று மகிழ்ச்சியான விஷயங்கள் நடைபெற்று இருப்பதாக லைலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் 'பிதாமகன் வெளியாகி 20 ஆண்டுகள், சர்தார் திரைப்படம் வெளியாகி ஓராண்டு, தளபதி 68 படத்தின் அறிவிப்பு உள்ளிட்ட 3 விஷயங்கள் நடந்துள்ளன. என் பிறந்தநாள் எப்போதும் சிறப்பான விஷயங்களை கொடுத்து வருகிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி' என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்