யோகா பயிற்சியில் வரிசையாக 3 தலைமுறை நடிகைகள்... ரசிகர்கள் புகழாரம்
|வாழ்க்கை சமநிலையை உங்களிடம் இருந்து கற்று கொண்டேன் என நடிகை ரித்திமா கபூரின் புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
புனே,
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று உற்சாகமுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் யோகா பயிற்சியை இன்று மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் உடல் மற்றும் மனம் புதுப்பொலிவு பெறுவதுடன் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
இந்த நிலையில், பாலிவுட்டை சேர்ந்த நடிகை நீத்து கபூரின் மகளான நடிகை ரித்திமா கபூர் சாஹ்னி தனது மகளான மற்றும் கேல் கேல் மெயின் படத்தின் நடிகையான சமரா சாஹ்னியுடன் ஒன்றாக யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
இது தவிர்த்து, அவர் தனியாக யோகா செய்வது உள்ளிட்ட சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார். அதனுடன் அவர் வெளியிட்ட செய்தியில், நாம் பொருட்களை பார்க்கும் முறையை யோகா மாற்றுவது மட்டுமின்றி, பார்க்க கூடிய நபரையும் உருமாற்றுகிறது என பி.கே.எஸ். ஐயங்கார் கூறுகிறார்.
இந்த சர்வதேச யோகா தினத்தில், மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு ஒருசேர இனிமையை உண்டு பண்ணி, சமநிலைப்படுத்தி மற்றும் வலிமைப்படுத்துகிற யோகா உலகில் நீங்கள் உங்களை ஆழ்த்தி கொள்ளுங்கள் என பதிவிட்டு உள்ளார்.
இதற்கு சமூக ஊடக பயனாளர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர். இந்த புகைப்படங்கள் அவர்களை ஈர்த்து உள்ளன. அதில் ஒரு பயனாளர், வாவ்... 3 தலைமுறையை சேர்ந்தவர்கள் யோகா செய்கின்றனர் என ஒருவரும், ஊக்கம் அளிக்கிறது என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர். வாழ்க்கை சமநிலையை உங்களிடம் இருந்து கற்று கொண்டேன் என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.