3 படங்கள் லாபம்.. ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி
|இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாநாயகனாகவும் உயர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடியே படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நாயகியாக கவுரி கிஷன் நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் டைரக்டு செய்துள்ளார். படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர்.
இதில் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்று பேசும்போது "நான் நடித்துள்ள அடியே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வியாபார ரீதியாகவும் ஹிட் படமாக மாறி இருக்கிறது. பணம் போட்டு படம் எடுப்பவர்கள் அதில் இருந்து லாபம் எடுப்பது இன்றைய சூழ்நிலையில் ரொம்ப ரொம்ப கஷ்டம்.
இந்த நிலையில் அடியே படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கும் படமாக மாறி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசியாக எனது நடிப்பில் வந்துள்ள பேச்சிலர், செல்பி, அடியே ஆகிய மூன்று படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்து உள்ளன.
நாம் நடிக்கும் படங்கள் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். அதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் எனது படங்கள் லாபம் ஈட்டி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.