< Back
சினிமா செய்திகள்
திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா..!
சினிமா செய்திகள்

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா..!

தினத்தந்தி
|
29 Dec 2023 5:38 PM IST

நயன்தாரா மலையாளத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.

டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா மலையாளத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் ஐயா, சந்திரமுகி போன்ற பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திரைத்துறையில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதுகுறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'இந்த கடிதம் ரசிகர்களாகிய உங்களுக்கு தான். நான் சினிமாத்துறையில் 20 ஆண்டுகளாக நிலைத்து நிற்பதற்கு நீங்கள் தான் காரணம்.

நீங்கள் அளித்த உத்வேகம் தான் நான் ஒவ்வொரு முறையும் கீழே விழுந்த போதும் மீண்டும் எழ காரணமாக இருந்தது. நீங்கள் இல்லாமல், இந்த பயணம் முழுமையடையாது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் நீங்கள்தான் காரணம். இந்த இரண்டு தசாப்தங்களாக நீங்கள் அளித்த ஆதரவு மற்றும் ஊக்கம் தான் நான் இந்த மைல்கல்லை கொண்டாட காரணம்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்