சினிமாவில் 20 ஆண்டுகள்: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன திரிஷா
|சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்த தன்னை வாழ்த்திய ரசிகர்களுக்கு திரிஷா வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து உள்ளார்.
திரிஷா சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்தி கொண்டாடி வருகிறார்கள். லேசா லேசா படம் மூலம் திரிஷா அறிமுகமானாலும் 2002-ல் வந்த 'மவுனம் பேசியதே' படம்தான் அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம்.
தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, ஆறு என்று வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 20 ஆண்டுகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட அனைத்து பெரிய கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டார்.
பொன்னியின் செல்வன் படம் அவரை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்தியது. இதில் அவர் நடித்த குந்தவை கதாபாத்திரத்துக்கு பெரிய பாராட்டுகள் கிடைத்தன. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சினிமாவில் மூத்த நடிகையாக இருந்தும், இப்போதும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்த தன்னை வாழ்த்திய ரசிகர்களுக்கு திரிஷா வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து உள்ளார். ''ரசிகர்களின் இதயங்களில் நான் எப்போதும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் மீது நீங்கள் காட்டும் அன்பை கொண்டாடுகிறேன். நன்றி" என்று கூறியுள்ளார்.