3 நிமிடங்களில் 184 செல்பி... கின்னசில் இடம் பிடித்த நடிகர் அக்ஷய் குமார்
|அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி உள்ள 'செல்பி' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது அவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு 3 நிமிடங்களில் ரசிகர்களுடன் 184 செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
தமிழில் '2.0' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து பிரபலமானவர் அக்ஷய் குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் பச்சன் பாண்டே, ராம் சேது, சாம்ராட் பிருதிவிராஜ் உள்பட 6 படங்கள் வெளியாகி அனைத்தும் தோல்வி அடைந்தன.
தற்போது அவரது நடிப்பில் தயாராகி உள்ள 'செல்பி' இந்தி படம் திரைக்கு வருகிறது. மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இந்தி ரீமேக் ஆக இது தயாராகி உள்ளது. செல்பி படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.
இந்தப்படத்தை அக்ஷய் குமார் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது அவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு 3 நிமிடங்களில் ரசிகர்களுடன் 184 செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ராக் 3 நிமிடங்களில் 105 செல்பி எடுத்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. அவரது சாதனையை அக்ஷய் குமார் முறியடித்துள்ளார். இந்த சாதனையை ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.