< Back
சினிமா செய்திகள்
ஒரே ஆண்டில் 18 படங்கள்... யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனையை படைத்த விஜயகாந்த்...!
சினிமா செய்திகள்

ஒரே ஆண்டில் 18 படங்கள்... யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனையை படைத்த விஜயகாந்த்...!

தினத்தந்தி
|
28 Dec 2023 7:41 PM IST

ஆக்சன் படங்களுக்கும் குடும்பம் குடும்பமாக மக்களை திரையரங்கிற்கு படையெடுக்க வைத்த பெருமை இவரையே சேரும்.

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் 1979ம் ஆண்டு இயக்குநர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து தனது திரைப்பயணத்தை துவக்கினார். அதன்பின் 1980ல் வெளிவந்த 'தூரத்து இடி முழக்கம்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார்.

1981ல் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

இதன் பிறகு தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாக காண்பிக்க நினைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப்படங்களை தந்தார் விஜயகாந்த். தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூல் சாதனையை படைத்தது. ஆக்சன் படங்களுக்கும் குடும்பம் குடும்பமாக மக்களை திரையரங்கிற்கு படையெடுக்க வைத்த பெருமை இவரையே சேரும்.

இவர் ஒரே ஆண்டில் 18 படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனையை படைத்துள்ளார். இவர் 1984ம் ஆண்டில் மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், தீர்ப்பு என் கையில், வெற்றி, நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், குழந்தை ஏசு, வெள்ளைப்புறா ஒன்று, நல்ல நாள், மாமன் மச்சான், வீட்டுக்கு ஒரு கண்ணகி, சபாஷ், நாளை உனது நாள், சத்தியம் நீயே, இது எங்க பூமி, வைதேகி காத்திருந்தாள், ஜனவரி 1, குடும்பம் ஆகிய 18 படங்களில் நடித்து பிரமாண்ட சாதனையை படைத்தார்.

தமிழ் திரைத்துறையில் இவரின் இந்த சாதனையை தற்போது வரை எந்த ஒரு பெரிய நடிகர்களாலும் முறியடிக்க முடியவில்லை. தற்போது உள்ளதை போல தொழிநுட்பங்கள் வளர்ச்சி அடையாத அந்த காலத்தில் வேறு எந்த பெரிய நடிகர்களும் செய்ய தயங்கிய ஒரு சாதனையை விஜயகாந்த் செய்து காட்டினார்.

மேலும் செய்திகள்