< Back
சினிமா செய்திகள்
14 ஆண்டுகால உழைப்பு : பிருத்விராஜூக்கு நடிகர் சூர்யா வாழ்த்து
சினிமா செய்திகள்

14 ஆண்டுகால உழைப்பு : பிருத்விராஜூக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

தினத்தந்தி
|
26 March 2024 10:21 PM IST

'ஆடுஜீவிதம்' படத்திற்காக நடிகர் சூர்யா பிருத்விராஜூக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் படம் போல வாழ்வில் ஒருமுறைதான் வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது 'ஆடுஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்சி இயக்கி உள்ளார். நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

'ஆடுஜீவிதம்' படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

இந்த டிரெய்லர் லிங்கை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, 'உயிர் பிழைக்கும் போராட்டம் கடுமையானது. இந்தக் கதையைச் சொல்ல கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உழைப்பை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும். இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்' எனக் கூறியுள்ளார்.

பிருத்விராஜூம் படத்திற்காக உடல் எடை கூட்டி, குறைத்துள்ளார். இந்த உழைப்பைதான் நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்