< Back
சினிமா செய்திகள்
பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த  குழந்தைகள்..  கொந்தளித்த பொதுமக்கள்
சினிமா செய்திகள்

பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த குழந்தைகள்.. கொந்தளித்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
2 May 2024 3:44 PM IST

பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனையை செய்ய நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை இன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிரபுதேவா சொதப்பியிருக்கிறார்.

இந்திய மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர், இயக்குநர், நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் தேர்ந்தெடுத்த 100 பாடல்களுக்கு பெரியவர்கள், குழந்தைகள் என 5000 பேர் நூறு நிமிடங்களுக்கு நடனம் ஆடி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உலக சாதனை செய்ய இருந்தனர்.

இந்நிகழ்ச்சியை ராபர்ட் மாஸ்டர் அவரது குழுவினருடன் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபுதேவா கலந்து கொள்வதாக இருந்தது. இதனால், அவரைப் பார்ப்பதற்காக பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

பலர் வெயிலையும் பொருட்படுத்தாது தங்கள் குழந்தைகளுடன் வந்திருப்பதையும் பார்க்க முடிந்தது. ஆனால், இன்று திட்டமிட்டபடி பிரபுதேவா நிகழ்ச்சிக்கு வராததால் அங்கு கூடியிருந்த ரசிகர்களும், பொதுமக்களும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் கடும்அதிருப்தி அடைந்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகள் பல மணிநேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சிலர் மயங்கி விழுந்தனர்.

"பிரபுதேவா வருகிறார் என்பதால் தான் வெயிலையும் பொருட்படுத்தாது இங்கு வந்தோம். காலை 6 மணியில் இருந்தே இங்கு நிற்கிறோம். நிகழ்ச்சி ஏற்பாடுகளும் சரிவர செய்யவில்லை. எங்களைப் போல பலரும் மதுரை, சேலம் என தொலைதூர ஊர்களில் இருந்து இரவு முழுக்க பயணம் செய்து வந்திருக்கிறார்கள். மிக மோசமான அனுபவம் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கு ஏதாச்சு ஆச்சுனா மாஸ்டர் வந்து பார்ப்பாரா?" என்று பிரபு தேவா வருகைக்காக காத்திருந்த பெற்றோர் கொந்தளித்தனர்.

இது குறித்து ராபர்ட் மாஸ்டர், "ஹைதராபாத்தில் இருந்து பிரபுதேவா மாஸ்டர் வருவதாகதான் இருந்தார். ஆனால், திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதற்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்பதாக சொல்ல சொன்னார். லைவ்வில் நிகழ்ச்சியைப் பார்த்தார். காணொளி வாயிலாக நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். மீண்டும் ஒரு பிரமாண்ட நிகழ்வில் நாம் நிச்சயம் சந்திப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கினார்" என்றார்.

மேலும் செய்திகள்