4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஹனு-மான்..!
|ஹனு-மான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஐதராபாத்,
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார்.
இந்த படம் கடந்த ஆண்டு மே 12ம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹனு-மான் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரசாந்த வர்மா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'எனது முதல் செஞ்சுரி படம்' என பதிவிட்டுள்ளார்.
இந்த படம் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் படமாக வெளியாகி உள்ளது. அடுத்ததாக அதீரா என்ற சூப்பர் ஹீரோ படத்தை பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார். அதனை தொடர்ந்து 2025ம் ஆண்டு ஹனு-மான் படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.