இமயமலைப் பகுதியில் நிர்வாணமாக 10 நாட்கள்.. புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பாலிவுட் நடிகர்...!
|பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் வித்யூத் ஜாம்வால் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,,
விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இவர் இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி வில்லனாக விளங்குகிறார்.
இந்நிலையில் நடிகர் வித்யூத் ஜாம்வால் நேற்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவர் இமயமலை தொடர்களில் ஒரு வாரம், தான் யார் உதவியும் இன்றி வாழ்ந்ததை தெரிவிக்கும் விதமாக அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பதிவில், 'இமயமலை தொடர்களில் நான் இயற்கையோடு ஒன்றி இப்படி வாழ்வது 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் 7-10 நாட்கள் தனியாக கழிப்பது என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விலகி இந்த நாட்களில் நான் மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்கிறேன்.
'நான் யார்' என்பதை தெரிந்து கொள்வதற்கு 'நான் யார் இல்லை' என்பதை தெரிந்துகொள்வதே அதற்கு முதல் படியாகும். அதற்காக இயற்கையால் வழங்கப்படும் ஆடம்பரங்களை அனுபவித்து மகிழ்கிறேன்.
எனது அன்றாட வாழ்க்கை முறையில் இருந்து வெளியே நான் மிகவும் வசதியாக இருக்கிறேன். நான் என்னை ஒரு சாட்டிலைட் டிஷ் ஆண்டெனாவாக நினைத்துக்கொண்டு இயற்கையின் அன்பான மற்றும் மகிழ்ச்சியான அதிர்வலைகளை பெற முயற்சி செய்கிறேன்.
இங்கு நான் என் வாழ்க்கையை வாழ்வதற்காக ஆற்றலை பெற்று தற்போது மீண்டும் வெளி உலகிற்கு வருகிறேன். என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். இது எனக்கு ஒரு மறுபிறப்பு போன்றது' என்று பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவர் நடித்துள்ள 'கிராக்' திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 23-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.