புதிய தோற்றத்தில் கார்த்தி
|ராஜுமுருகன் இயக்கும் ஜப்பான் என்ற படத்தில் நடிக்கும் கார்த்தியின் வித்தியாசமான புதிய தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
கார்த்தி நடிப்பில் இந்த வருடம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. சர்தார் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். சர்தார் படத்தில் இடம்பெற்ற கார்த்தியின் வயதான தோற்றம் ரசிகர்களை கவர்ந்ததால் இரண்டாம் பாகம் படத்திலும் வயதான கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று திரைக்கதை அமைக்க உள்ளனர். இதுவரை கார்த்தி 24 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்து 25-வது படமாக ஜோக்கர் படம் மூலம் தேசிய விருது பெற்ற ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடிக்கிறார். ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் கார்த்தியின் வித்தியாசமான புதிய தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.