இணையத்தில் கசிந்த காட்சிகள்... நயன்தாரா படக்குழு போலீசில் புகார்
|ஜவான் படம் திரைக்கு வரும் முன்பே அதில் இடம்பெற்று இருந்த காட்சிகள் இணையதளத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா ஜவான் படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாயகனாக ஷாருக்கான் வருகிறார். விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அட்லி டைரக்டு செய்துள்ளார்.
இந்த படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். படத்தின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜவான் படம் திரைக்கு வரும் முன்பே அதில் இடம்பெற்று இருந்த காட்சிகள் இணையதளத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகளை யாரோ திருடி இணையதளத்தில் பரவவிட்டு உள்ளனர். படப்பிடிப்பு நடந்தபோதே காட்சிகள் கசியக்கூடாது என்று கவனமாக இருந்தனர். படப்பிடிப்பு தளத்தில் செல்போனை அனுமதிக்கவில்லை. அதையும் மீறி படப்பிடிப்பு காட்சிகளை திருடி இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து டுவிட்டர் கணக்கு வைத்திருக்கும் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.