அயோத்தியில் கட்டுமான பணி முடிந்தபின்னர் ராமரை தரிசனம் செய்வேன்- திக்விஜய் சிங்
|இந்து சாஸ்திரங்களின்படி, கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடியாது என திக்விஜய் சிங் கூறினார்.
சத்னா:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. இந்த கோவில் திட்டத்தை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேர்தல் ஆதாயங்களுக்காக அரசியல் திட்டமாக ஆக்குவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங், சத்னா நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடவுள் ராமர் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். ராமரை தரிசனம் செய்ய அவசரப்படமாட்டோம். கட்டுமான பணிகள் முடிந்தபின்னர் அங்கு சென்று ராமரை தரிசனம் செய்வோம்.
ராமரை தரிசனம் செய்ய எங்களுக்கு அழைப்பு தேவையில்லை. இந்து சாஸ்திரங்களின்படி, கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடியாது. கும்பாபிஷேக விழாவிற்கு எந்த சங்கராச்சாரியாரும் போகமாட்டார்கள். எந்த துறவியும் போகப்போவதில்லை. நிர்மோகி அகாராவின் உரிமைகளை பறித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.