< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
ராமர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம்
ராமர் கோவில் ஸ்பெஷல்

ராமர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம்

தினத்தந்தி
|
22 Jan 2024 8:34 PM IST

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

அயோத்தி,

ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை அயோத்தி மட்டுமல்லாது, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல பகுதிகளில் ராமர் குறித்த பாடல்களை கோயில்களில் ஒலித்து, சிறப்பு பிரார்த்தனைகள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமர் சிலை பிரதிஷ்டை செய்த சிறப்பு வாய்ந்த நாளான இன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிசேரியன் மூலம் 3 குழந்தைகள் பிறந்தன. உத்தரபிரதேசத்தின் பிரோசாபாத்தில் ஒரு முஸ்லிம் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் ராம் ரஹீம் என்று பெற்றோர் பெயரிட்டனர்.

கேரளா: திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலில் அதிகாலை முதல் பூஜைகள் நடைபெற்றன. கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், வழுதக்காடு ரமாதேவி கோவிலில் வழிபாடு செய்தார்.

கர்நாடகா: ராமர், தான் பிறந்த இடத்திற்கு வந்ததை வரவேற்கும் விதமாக கர்நாடகாவின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ராமர், அனுமன் கோவில்கள் மட்டுமின்றி வெங்கடேஷ்வரர் கோவில்களிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெங்களூரு ராமாஞ்சநேய குடா கோவில், பட்டாபிராம சுவாமி கோவில், ராஜாஜிநகரில் உள்ள ராமர் கோவில் மற்றும் மல்லேஸ்வரத்தில் உள்ள ராமதேவர் தேவஸ்தானம், பசவனகுடி ராமர் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

ஜார்கண்ட்: மாநிலத்தில் 51,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. ஜாம்ஷெட்பூரில் உள்ள கோல்முரியில் அமைந்துள்ள கேபிள் டவுனில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோயில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 18,500 சதுர அடியில் ராமரின் பிரமாண்ட ரங்கோலியை கலைஞர் விவேக் மிஸ்ரா, மூன்று டன்களுக்கும் அதிகமான வண்ணங்களைப் பயன்படுத்தி இரண்டு வாரங்களாக உருவாக்கினார்.

பீகார்: பாட்னா பெய்லி சாலையில் உள்ள பிரியதர்ஷி நகரில் அமைந்துள்ள அனுமன் கோவிலில் பெண் பக்தர்கள் அதிகாலையில் 'கீர்த்தனை' (பக்தி பாடல்கள்) பாடினர். அதே நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ண பிரணாமி கோவிலில் சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது.

அசாம், அருணாச்சல பிரதேசம்: அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கும்பாபிஷேகம் விழா நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாலை 4 மணி வரை அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டன.

மத்தியப் பிரதேசம்: மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ், நிவாரி மாவட்டம் ஓர்ச்சாவில் உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்தார். பகவான் ராமர், பகலில் ஓர்ச்சாவில் தங்கி, இரவில் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு செல்வதாக அங்குள்ள பக்தர்கள் நம்புகின்றனர்.

டெல்லி: ஆளும் ஆம் ஆத்மி கட்சி கும்பாபிஷேக விழாவைக் குறிக்கும் வகையில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் முழுவதும் பல இடங்களில் கோவில்களில் பஜனை, கீர்த்தனை மற்றும் ராமாயணம் படித்தல் போன்ற மத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஜெய்சால்மர் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள தனோட் மாதா கோவிலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ராமாயணத்தை பாராயணம் செய்தனர்.

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பல கோயில்களில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் முழுமையான இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

மேலும், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் அரியானா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் ஊர்வலங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்