ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜனவரி 22-ம் தேதியை தேர்வு செய்ய இதுதான் காரணம்!
|கோவிலில் உள்ள கருவறையில் ராமர் சிலை, அபிஜித் முகூர்த்த நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் கருவறையில், 5 வயது குழந்தை உருவம் கொண்ட ராமர் தனது வில்லுடன் காட்சி அளிக்கும் சிலை 22-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலை மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் கிருஷ்ணா சில்லா என்ற வகை கல்லில் செதுக்கப்பட்டதாகும்.
ஜனவரி 22-ந் தேதி, சுபமுகூர்த்த நாளாகும். இந்த நாளில் சர்வார்த்த சித்தி, அம்ரித் சித்தி மற்றும் ரவி என 3 யோகங்கள் ஒரு சேர வருகிறது. இந்த 3 யோகங்களும் எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்வதற்கு மிகவும் மங்களகரமான நாளாகும். மேலும் அன்றைய தினம் துவாதசி திதி ஆகும். இந்த நாளில் தான் கடவுள் விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பாற்கடலை கடைய உதவினார். ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால், இந்த நாள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு மிகவும் உகந்ததாகும்.
கோவிலில் உள்ள கருவறையில் ராமர் சிலை, அபிஜித் முகூர்த்த நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த முகூர்த்த நேரம் பகல் 11.51-க்கு தொடங்கி 12.34-க்குள் முடிகிறது. இருப்பினும் அதிலும் மிகவும் நல்ல நேரமாக 12.29 நிமிடங்கள் 8 வினாடிகள் முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் வரை என மொத்தம் 84 வினாடிகளில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சூரிய உதயத்திற்கும், சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் 15 முகூர்த்தங்கள் உள்ளன. இதன் நடுப்பகுதி அபிஜித் முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அபிஜித் முகூர்த்தத்தில் திரிபுரசூரன் என்ற அரக்கனை சிவபெருமான் வதம் செய்தார். மேலும் இந்த முகூர்த்தத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும் நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஜோதிடக்கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.