அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
|கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் திரளாக கோவிலுக்கு வரத் தொடங்கினர்.
அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவில் பிரதிஷ்டை நேற்று நடைபெற்ற நிலையில், இன்று முதல் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை அதிகாலை 3 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
இதனால் கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அயோத்தி கோவிலில் இன்று காலை குவிந்த பக்தர்கள் கூட்டம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், அயோத்தியில் குவிந்து வரும் பக்தர்களின் கூட்டத்தைக் காணும்போது திரேதா யுகத்திற்கு சென்றது போல் இருப்பதாக அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு அயோத்தி நகரம் தூய்மை அடைந்துள்ளது. அயோத்திக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். எங்கும் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் கேட்கிறது. திரேதா யுக காலத்தில் இருந்த அயோத்திக்கு சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.