< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
அனுமன் வேடமணிந்து நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு
ராமர் கோவில் ஸ்பெஷல்

அனுமன் வேடமணிந்து நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு

தினத்தந்தி
|
23 Jan 2024 10:36 AM IST

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சண்டிகர்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனிடையே, ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த வகையில், அரியானா மாநிலம் பிஹ்வானி நகரில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் மேதா என்ற நபர் கடவுள் அனுமன் வேடமணிந்திருந்தார். ராம்லீலா நிகழ்ச்சி இறுதியில் கடவுள் ராமர் வேடமணிந்த நபரின் காலை அனுமன் வேடமணிந்திருந்தவர் வணங்குவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழ்ச்சியின் நடுவே ஹரிஷ் மேதா மேடையில் நின்றுகொண்டிருந்த ராமர் வேடமணிந்த நபரின் கால் அருகே விழுந்தார். இதனை, நிகழ்ச்சியின் ஒருபகுதி என நினைத்த அருகில் இருந்தவர்கள் ஹரிஷ் மேதாவை எழுப்பாமல் நாடகத்தை தொடர்ந்தனர். சில நிமிடங்களாக ஹரிஷ் மேதா மேடையில் விழுந்துகிடந்ததால் அதிர்ச்சியடைந்த சிலர் அவரை எழுப்ப முயற்சித்தனர். அப்போது, ஹரிஷ் மேதா மயங்கிய நிலையில் இருந்ததால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹரிஷ் மேதாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்.

ராம்லீலா நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நிகழ்ச்சி மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனால், ஹரிஷ் நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என நினைத்து அவரை அருகில் இருந்தவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்