ராமர் கோவில் திறப்பு விழா; அயோத்தியில் குவியும் பரிசுப் பொருட்கள்
|சீதையின் பிறப்பிடமான ஜானக்பூரில் இருந்து அயோத்திக்கு 3,000 பரிசுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் 2,100 கிலோ எடை கொண்ட கோவில் மணி, 1,100 கிலோ எடை கொண்ட ராட்சத விளக்கு, 10 அடி உயர பூட்டு மற்றும் சாவி, ஒரே சமயத்தில் 8 நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பரிசுப் பொருட்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சீதையின் பிறப்பிடம் என நம்பப்படும் நேபாளத்தின் ஜானக்பூரில் இருந்து சுமார் 3,000-க்கும் அதிகமான பரிசுப் பொருட்கள் அயோத்திக்கு வந்து சேர்ந்துள்ளன. வெள்ளி காலணிகள், ஆபரணங்கள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் சுமார் 30 வாகனங்களில் ஜானக்பூரில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதே போல் இலங்கையில் இருந்து வருகை தந்த பிரதிநிதிகள் குழுவினர், ராமாயணத்தில் ராவணன் சீதையை கவர்ந்து சென்று வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள அசோக வனத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாறையை பரிசளித்தனர்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த விஹா பர்வத் என்பவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசளிப்பதற்காக 108 அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்ட ஊதுபத்தியை தயாரித்துள்ளார். இதன் எடை 3,610 கிலோ ஆகும். இதனை தயாரிக்க 6 மாதங்கள் ஆனதாகவும், முற்றிலும் இயற்கையான முறையில் இந்த ஊதுபத்தி தயாரிக்கப்பட்டதாகவும் விஹா பர்வத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில அரசு சார்பில் 44 அடி நீள பித்தளை கொடி கம்பம் மற்றும் ஆறு சிறிய கம்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த சத்ய பிரகாஷ் சர்மா என்பவர், 400 கிலோ எடையும், 10 அடி உயரமும் கொண்ட பூட்டு மற்றும் சாவியை ராமர் கோவிலுக்கு பரிசாக அளித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் 8 உலோகங்களால் செய்யப்பட்ட 2,100 கிலோ எடை கொண்ட கோவில் மணியை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளனர். லக்னோவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி அணில் குமார் சாகு, ஒரே சமயத்தில் 8 நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரம் ஒன்றை ராமர் கோவிலுக்கு பரிசளித்துள்ளார்.
வதோதராவில் வசிக்கும் அரவிந்த்பாய் பட்டேல் என்ற விவசாயி 1,100 கிலோ எடை கொண்ட ராட்சத விளக்கை வடிவமைத்து ராமர் கோவிலுக்கு வழங்கியுள்ளார். மொத்தம் 9.25 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த விளக்கு தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகிய 5 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் மனோகர் என்பவர், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்காக 7 ஆயிரம் கிலோ அல்வாவை தயாரித்து வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒரு லட்சம் லட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.