அயோத்தி ராமர் கோவில் விண்ணிலிருந்து எப்படி தெரியும்? வைரலாகும் புகைப்படங்கள்
|விண்ணில் உள்ள செயற்கைக்கோள் மூலம் ராமர் கோவிலை இஸ்ரோ படம் பிடித்துள்ளது.
சென்னை,
அயோத்தியில் பால ராமருக்காக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் தொன்மை மற்றும் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலையின் கலவையாக கட்டப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகள் தாக்குபிடிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதாவது, இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ராமர் கோவில் பகுதி 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் கட்டுமான பணிகள் 57 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளன. மூன்றடுக்குகளாக இந்த கோவில் அமைந்துள்ளது. இரும்பின் ஆயுட் காலம் 80 -90 ஆண்டுகள் மட்டுமே என்பதால் இந்த கோவில் கட்டுமான பணிக்கு இரும்பு பயன்படுத்தவில்லை. எக்குவும் பயன்படுத்தவில்லை. ராமர் கோவிலின் உயரம் 161 அடியாக இருக்கும்.
குதுப் மினாரின் உயரத்தில் 70 சதவீதம் கொண்டது ஆகும். தரமான கிரானைட், மணற்கல் மற்றும் மார்பிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிமெண்ட் எதிலுமே பயன்படுத்தப்படவில்லை. கற்களை இணைக்கும் பகுதிக்கு கூட சிமெண்டுகளோ சுண்ணாம்பு சாந்தோ பயன்படுத்தவில்லை என்று கட்டுமான பணிகளை மேற்கொண்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இப்படி சிறப்புமிக்க ராமர் கோவிலை விண்வெளியில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ராமர் கோவிலை விண்ணில் உள்ள நமது செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்துள்ளது.
இந்த புகைப்படங்கள், கடந்த 13-ம் தேதி இஸ்ரோவின் ஐஆர்எஸ் கார்டோசாட் செயற்கைக்கோளால் எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படங்கள் ராமர் கோவிலை தவிர, அயோத்தியின் புகழ்பெற்ற தஷ்ரத் மஹால், சரயு நதி மற்றும் நகரத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தையும் காட்டுகின்றன. இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதன் காரணமாக செயற்கைக்கோளால் கோவிலில் சமீபத்திய படங்களை தெளிவாக பிடிக்க முடியவில்லை.