அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை... வெளியான முதல் புகைப்படம்
|அயோத்தி கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையை மைசூரை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அயோத்தியில் நிறுவப்பட உள்ள கடவுள் ராமர் சிலை கோவில் சென்றடைந்தது. பின்னர் கிரேன் மூலம் அந்த சிலை நேற்று அதிகாலை கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது . 51 அங்குல சிலையின் கண்கள் துணியால் மூடப்பட்டுள்ளது. இந்த ராமர் சிலையை மைசூரை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.