அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீதாதேவிக்கு அனகாபுத்தூரில் இருந்து வாழை நார் புடவை
|அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
சென்னை,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்
அந்த வகையில் அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமம் சார்பில், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 20 அடி நீளத்தில் வாழை நார் புடவை பிரத்யேகமாக சீதாதேவிக்காக செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவு குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தினர், வாழை, கற்றாழை, அன்னாசி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை நார்களை இழைத்து, புடவை, கைப்பை, பேன்ட், சட்டை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் பொருட்கள், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டினர், இங்கு தயார் செய்யப்படும் புடவைகளை ஆர்வத்துடன் ஆன்லைன் வாயிலாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில்,இயற்கை நார் நெசவு குழுமம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, வாழை நாரில் புடவையை சீதாதேவிக்காக செய்து அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி பத்து நாட்களாக இரவு, பகலாக நெய்து, ராமர் கோவில் வடிவமைப்புடன் கூடிய புடவையை தயார் செய்துள்ளனர்.
இந்த புடவை, 4 அடி அகலம், 20 அடி நீளம் உடையது. இதனை தமிழ்நாடு வாழை உற்பத்தி சங்கம் மூலம் ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ளனர். சீதாதேவிக்கு சாற்றுவதற்காக இந்த வாழை நார் புடவை பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது என்று இயற்கை நார் நெசவு குழுமத்தின் தலைவர் சேகர் கூறினார்.