< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அழைப்பை நிராகரித்த சோனியா, கார்கே
ராமர் கோவில் ஸ்பெஷல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அழைப்பை நிராகரித்த சோனியா, கார்கே

தினத்தந்தி
|
10 Jan 2024 5:18 PM IST

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இம்பால்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்பதா என்பது குறித்து "மிக விரைவில்" முடிவெடுப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'பகவான் ராமரை லட்சக்கணக்கானவர்கள் வழிபாடு செய்கின்றனர். மதம் என்பது தனிப்பட்ட விவகாரம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசு நீண்ட காலமாக தங்கள் அரசியல் திட்டம் ஆக்கிவிட்டது. அயோத்தியில் இன்னும் முழுமையாக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாத கோவிலை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மேலும், "2019ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்.' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்