மத்திய பிரதேசத்தில் இருந்து 5 லட்சம் லட்டுகள் நாளை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
|நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
போபால்,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அயோத்திக்கு உஜ்ஜைனியின் மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 5 லட்சம் லட்டுகளை பிரசாதமாக அனுப்ப உள்ளதாக மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 4 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளது. இன்று ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. அவை அனைத்தும் நாளை 3 முதல் 4 லாரிகளில் மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து அயோத்திக்கு அனுப்பப்படுகிறது என்று கோவில் உதவி நிர்வாகி மூல்சந்த் ஜுன்வால் தெரிவித்துள்ளார்.
இந்த லட்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 50 கிராம் எடையுள்ளதாகவும், மொத்த 250 குவிண்டால் எடை இருக்கும் எனவும் 900 கி.மீ தொலைவில் உள்ள அயோத்திக்கு பாபா மகாகாள் பிரசாதமாக அனுப்பப்படும் என மத்திய மந்திரி மோகன் யாதவ் அறிவித்ததை அடுத்து, ஐந்து நாட்களில் 150 கோவில் பணியாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் லட்டுகளை தயார் செய்ததாக மூல்சந்த் ஜுன்வால் தெரிவித்தார்.