கோயம்புத்தூர்
மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
|ஒன்றாக ஊர் சுற்றியதால் மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது24). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காத லித்து வந்தார். அவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி மாணவி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்ல வில்லை. இது பற்றி மாணவியின் தந்தையான கார்த்தி கேயனுக்கு பள்ளியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அறிவுரை
இது பற்றி அவர் விசாரித்த போது தனது மகள் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலன் பிரேம்குமாருடன் ஊர்சுற்றியது தெரிய வந்தது.
இது பற்றி கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார், அந்த மாணவி மற்றும் பிரேம்குமார், அவரது பெற்றோரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வில்லை. மேலும் பிரேம்குமார் மீது மாணவியின் தந்தை கார்த்திகேயன் ஆத்திரம் அடைந்தார்.
இதனால் அவர், நேற்று முன்தினம் பிரேம்குமாரை தொடர்பு கொண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தியேட்டர் அருகே வருமாறு அழைத்தார். அதை ஏற்று பிரேம்குமார் தனியாக சென்றதும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்திக்குத்து
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் தனது நண்பர்கள் சரவணன், மணி ஆகியோருடன் சேர்ந்து பிரேம்குமாரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் கார்த்தி கேயன், சரவணன், மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து கார்த்திகேயன், சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.