விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
|விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே செஞ்சி சாலையில் அமைந்துள்ளது நேமூர் கிராமம். இப்பகுதியில் பழமையான சிற்பம் காணப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன், திருவாமாத்தூர் கண.சரவணக்குமார் ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது நேமூர் ஏரிக்கரையில் துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.இந்த சிற்பம் பல்லவர் காலத்தை சேர்ந்தது ஆகும். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை வழிபாடு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதாகும். அச்சம் தரத்தக்க தெய்வமாக, போருக்கான அதன் வெற்றிக்கான தெய்வமாக கொற்றவை வணங்கப்பட்டாள். இத்தெய்வம் குறித்து நம் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கானமர் செல்வி, காடுறை கடவுள், பெருங்காற்றுக் கொற்றி, கொற்றவை எனும் பெயர்கள் இவளுக்கு வழங்கப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் உருவத்தை பல்வேறு நிலைகளில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இளங்கோவடிகள். இதில், பாய்கலப் பாவை (பாய்ந்து வரும் மானை வாகனமாக கொண்டவள்) எனக்குறிப்பிடப்படுகிறாள்.
நேமூர் ஏரிக்கரையில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பம் கி.பி. 8-9-ம் நூற்றாண்டை (பல்லவர் காலம்) சேர்ந்தது ஆகும். சுமார் 6 அடி உயரமுள்ள பலகைக்கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
8 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை தக்க ஆயுதங்களை ஏந்தி, எருமைத்தலையின் மீது நிற்கிறாள். கொற்றவையின் இடது கரத்தின் கீழே மான் காட்டப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரம் சொல்லும் பாய்கலப் பாவையை நினைவூட்டுகிறது. கால்களின் இரண்டு பக்கங்களிலும் வணங்கி பூஜை செய்யும் நிலையில் அடியவர் இருவர் காட்டப்பட்டு இருக்கின்றனர்.
கொற்றவை சிற்பத்தின் அருகிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் 6 முகங்களை கொண்ட சிற்பம் தனிக்கல்லில் காணப்படுகிறது. இது முருகனை குறிப்பதாகும். இந்த சிற்பமும் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். நேமூர் ஏரி பகுதியில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தடயங்கள் கிடைக்கக்கூடும் என அவர்கள் கூறினர்.