'ஓவினம்' தற்காப்பு கலையில் அசத்தும் சிறுவன்

நம் தமிழ்நாட்டிற்கு அதிகம் பரீட்சயமில்லாத விளையாட்டு, ஓவினம். அந்த விளையாட்டிலும், அசத்துகிறார் ரஜித்சாய்.

Update: 2023-08-20 06:41 GMT

 சென்னை அசோக் நகரை சேர்ந்தவரான இவர், 3-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 2 வருடங்களாகவே பயிற்சி பெற்று, சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றிருக்கிறார். இளம் வயதில், குறுகிய காலத்தில் பயிற்சி பெற்று பரிசு வென்றது குறித்து, ரஜித் சாய் மழலை மொழியில் பேசினார்.

''சிறு வயசில இருந்தே சிலம்பம், குத்துவரிசை போன்ற பயிற்சிகளை எடுத்திருக்கிறேன். ஆனால் வியாட்நாம் நாட்டிற்கு சொந்தமான ஓவினம் கலையில், சிலம்பம், ஜூடோ, குங்பூ, கராத்தே போன்ற பல தற்காப்பு கலைகள் ஒன்றாக கலந்திருப்பதாக அப்பா கூறினார். அதற்கு பிறகுதான், 'ஓவினம்' கத்துக்க ஆரம்பிச்சேன். இது ரொம்பவே சுவாரசியமான கலை. நம் ஊரில் பிரபலமாக இருக்கும் பல தற்காப்பு கலைகளின் கலைவையாக இருப்பதால், கற்றுக்கொள்ள சுவாரசியமாக இருக்கிறது'' என்பவர், கடந்த மாதம் இந்திய அளவிலான போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்று, வெண்கல பதக்கம் வென்றார்.

''ஐதராபாத்தில் வென்றதன் மூலம் இவ்வருட இறுதியில் சீனாவில் நடக்க இருக்கும் சர்வதேச போட்டியிலும் பங்கேற்க இருக்கிறேன். அதற்காகவே தீவிரமாக பயிற்சி பெறுகிறேன். எனக்கு ஓவினம் மட்டுமல்ல, அபாகஸ், ஓவிய பயிற்சி, சதுரங்கம்... போன்றவற்றிலும் ஆர்வம் அதிகம். அதனால் அப்பா முத்துபாண்டியன், அம்மா லதா ஆகிய இருவரும், நான் விரும்பும் எல்லா பயிற்சிகளுக்கும் அனுப்புகிறார்கள். எனக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம் என்றாலும், நிறைய படித்து விஞ்ஞானியாக மாறுவதே என்னுடைய ஆசை'' என்று ஜாலியாக பேசினார்.

ரஜித் சாயின் தந்தை, முத்து பாண்டியன் பேசியபோது...''ஓவினம், இப்போதுதான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. தமிழ்நாட்டை விட, வட மாநிலங்களில், ஓவினம் பற்றிய புரிதல் அதிகமாகவே இருக்கிறது. ஓவினம் மகாராஷ்டிராவில் பள்ளி விளையாட்டாக சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் ஆந்திரா, கர்நாடகாவிலும் பள்ளி விளையாட்டில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, ஓவினத்தை ஆசிய விளையாட்டுகளிலும் சேர்க்க இருக்கிறார்கள். அதனால் அடுத்த ஓரிரு வருடங்களில், தமிழ்நாட்டிலும் ஓவினம் பிரபலமாகிவிடும்'' என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்