விபத்தில் முடங்கியவரின் வெளியுலக சேவை

சக்கர நாற்காலியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்காமல் வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொண்டு தனது குடும்பத்திற்கு தன்னால் இயன்ற வருமானத்தையும் ஈட்டிக்கொடுத்து வருகிறார்.

Update: 2023-08-13 01:35 GMT

விபத்தில் சிக்கி 12 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்தவர் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி பலருடைய பாராட்டை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த இக்பால் சிங், 2009-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தாலும் அவரால் எழுந்து நடமாட முடியவில்லை. 12 ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். ஒரு தொண்டு நிறுவனம் அவருக்கு சக்கர நாற்காலி வழங்கி இருக்கிறது. அதனுடன் மோட்டார் பொருத்தப்பட்டு இரு சக்கர வாகனம் போல் வடிவமைத்து கொடுத்திருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும்போது சக்கர நாற்காலியை தனியாக பிரித்துக்கொள்ளலாம்.

வெளியே செல்வதாக இருந்தால் சக்கர நாற்காலியை அந்த மோட்டார் வாகனத்துடன் இணைத்தால் போதும். இருசக்கர வாகனம் போல் அது காட்சி அளிக்கும். குடும்பத்துக்கு பாரமாக இருக்காமல் அந்த வாகனத்தை பயன்படுத்தி ஏதாவதொரு வகையில் வருமானம் ஈட்டுவதற்கு இக்பால் சிங் முடிவு செய்தார். அது தனக்கு உடலளவில் நெருக்கடியை ஏற்படுத்திக்கொடுக்காத சவுகரியமான வேலையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். உணவு டெலிவரி செய்வது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணம் எழவே அதில் சேர்ந்துவிட்டார்.

காலையில் எழுந்ததும் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு சக்கர நாற்காலியை மோட்டார் வாகனத்துடன் பொருத்துகிறார். வீட்டின் உள் அறையில் இருந்தே அந்த வாகனம் புறப்படுகிறது. அதனை இயக்கியபடியே செல்போனில் உணவு ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் கடைக்கு செல்கிறார். அவரால் எழுந்து நடமாட முடியாது என்பதால் உணவக ஊழியர்களே வெளியே வந்து டெலிவரி செய்ய வேண்டிய உணவு பொட்டலத்தை இக்பால் சிங்கிடம் ஒப்படைக்கிறார்கள்.

அதனை வாங்கியபடி சம்பந்தப்பட்ட வீட்டு முகவரிக்கு செல்கிறார். தனது போனில் ஆர்டர் செய்தவரிடம் பேசுகிறார். அவருடைய உடல் நிலையை புரிந்து கொள்பவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து உணவு பொட்டலத்தை வாங்கி செல்கிறார்கள். மாடியில் வசிப்பவர்கள் கயிறு மூலம் பாத்திரத்தை கீழே இறக்கி அதில் உணவு பொட்டலத்தை வைக்க சொல்லி பெற்றுக்கொள்கிறார்கள்.

இக்பால்சிங் உணவு டெலிவரி செய்யும் காட்சியை உணவு வகைகளின் ருசி பற்றி விமர்சனம் செய்யும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் இக்பால் சிங் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவருடைய தன்னம்பிக்கையையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி பலருடைய பாராட்டை பெற்றுவிட்டது.

இக்பால் சிங் தினமும் 5 முதல் 7 வரை ஆர்டர்களை உணவு டெலிவரி செய்கிறார். அதன் மூலம் 200 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அதனை தன்னுடைய குடும்பத்திற்கு தன்னால் வழங்க இயலும் சிறு பங்களிப்பாக கருதுகிறார்.

அவரால் குறைவாகத்தான் சம்பாதிக்க முடிந்தாலும் தனது வருமானத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பலரும் பாராட்டி இருக்கிறார்கள். தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என்று கூறி திரியும் இளைஞர்கள் இக்பால் சிங்கை உதாரணமாக கொண்டு செயல்படுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்