கேரளாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு கண்ணாடி பாலம்
கேரளாவின் வாகமன் எனற பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும் கேரளாவிற்கு உலக அளவில் மற்றுமொரு புதிய அடையாளம் தேடிக் கொடுக்க இருக்கிறது, கண்ணாடி பாலம். அங்குள்ள வாகமானில் 40 மீட்டர் (131 அடி) நீளம் கொண்ட கண்ணாடி பாலம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தியாவின் மிக நீளமான தொங்கு கண்ணாடி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
பொதுவாக கண்ணாடி பாலங்களின் நீளத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட தூரத்திற்கு இடையே அதனை தாங்கும் தன்மை கொண்ட தூண்கள் நிறுவப்படும். கண்ணாடி பாலத்தின் இறுதி பகுதியும் தரைத்தளத்துடனோ, அங்குள்ள மலைப்பகுதியுடனோ பிணைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கண்ணாடி பாலம் அந்தரந்தில் தொங்கிய நிலையில் காட்சி அளிக்கிறது.
அதன் இறுதி முனைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் நின்று இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ப சற்று அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கண்ணாடி பாலம் சாய்தளமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் இறுதி முனையை அடைவதற்கு சற்று மேல்நோக்கி நடக்க வேண்டி உள்ளது. இந்த வடிவமைப்பும், அந்தரத்தில் தொங்கிய நிலையில் தோற்றமளிக்கும் கட்டமைப்பும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கேரள மாநில சுற்றுலாத்துறை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 3 கோடி ரூபாய் செலவில் இந்த கண்ணாடி பாலத்தை நிறுவி இருக்கிறது. இதற்காக ஜெர்மனியில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. 40 மீட்டர் நீளம் கொண்டிருக்கும் பாலத்தை தாங்குவதற்கு ஏதுவாக 35 டன் இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த கண்ணாடி பாலத்தில் ஒரே சமயத்தில் 30 பேர் நடக்கலாம். ஒரு நபருக்கு கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் இது அமைந்திருக்கிறது. முண்டகாயம், கூட்டிக்கால், கொக்கையாறு பகுதிகளுக்குள் நுழைந்தால் இந்த கண்ணாடி பாலம் கண்ணுக்கு புலப்பட்டுவிடும். தொலை தூரத்தில் இருந்து பார்க்கும்போது மலைக்கு நடுவே எந்த பிடிமானமும் இல்லாமல் தொங்கிய நிலையில் காட்சி அளிக்கும் இதனை காண்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
வாகமானுக்கு சுற்றுலா செல்பவர்களின் விருப்பமான இடங்களில் இந்த கண்ணாடி பாலம் நிச்சயம் இடம் பிடித்துவிடும் என்பது கேரள சுற்றூலாத்துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. ஏற்கனவே வாகமானில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ராக்கெட் எஜெக்டர், ஜெயண்ட் ஸ்விங், ஜிப்லைன், ஸ்கை சைக்கிள், ஸ்கை ரோலர், பங்கி டிராம்போலைன் போன்ற சாகசங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.