மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; சதர்லேண்ட் அபார சதம்... ஆஸ்திரேலியா 298 ரன்கள் குவிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்று வருகிறது.
பெர்த்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக போப் லிட்ச்பீல்ட் மற்றும் ஜார்ஜியா வோல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லிட்ச்பீல்ட் 25 ரன், ஜார்ஜியா வோல் 26 ரன் அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 4 ரன், பெத் மூனி 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய சதர்லேண்ட் - ஆஷ்லே கார்ட்னெர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கார்ட்னெர் 50 ரன்னில் அவுட் ஆனார்.இதையடுத்து தஹ்லியா மெக்ராத் களம் இறங்கினார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் தஹ்லியா மெக்ராத் 56 ரன்னுடனும், சோபி மோலினக்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி ஆட உள்ளது.