உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி

Update: 2023-08-11 08:27 GMT

'பிக் ஹோஸ்' என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சிப் பெட்டி அமெரிக்காவில் டெக்சாஸில் போர்ட் ஒர்த் என்னுமிடத்தில் உள்ள டெக்ஸாஸ் மோட்டார் ஸ்பீட் வே என்ற கார் பந்தயப் பாதையில் நிறுவப்பட்டிருக்கிறது.

218 அடி அகலமும், 94.6 அடி உயரமும் கொண்ட இதன் திரையை பேனாசோனிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஒரு போயிங் 767 விமானத்தை விடவும் பெரியது. ஏழு அடுக்கு கட்டிடத்தை விட உயரமானது. நாம் வீட்டில் உபயோகிக்கும் தொலைக்காட்சி அளவில் சொன்னால் இது 2,852 அங்குல தொலைக்காட்சி. இதில் 20,633.64 சதுர அடி பரப்பில் படங்களைப் பார்க்கலாம். இதன் எச்.டி எல்.இ.டி (HD LED) விளக்குகள் 4.8 மில்லியன் பிக்சல் சக்தியில் 281 டிரில்லியன் வண்ணங்களோடு ஒளிபரப்பும்.

இது 140 டிகிரி சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோட்டார் பந்தயப் பாதையில் கூடியிருக்கும் பெருங்கூட்டத்தினர் இதைக் கண்டு ரசிக்கலாம். இதனுடைய திரை மணிக்கு 120 மைல் வேகத்தில் அடிக்கும் காற்றையும் தாங்கும் சக்தி படைத்தது.

கால்பந்து போன்றவை திரையின் மீது விழுந்தாலும் திரை சேதமடையாது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து இதை இயக்கலாம். இதை இயக்க ஐந்து நபர் தேவை. இதுவே உலகின் மிக உயரமான டி.வி. என்ற கின்னஸ் சாதனையை, இன்றுவரை தக்க வைத்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்