காற்று அடைக்கப்பட்ட டயர் உருவான கதை..!

Update: 2023-09-08 06:52 GMT

சின்ன சைக்கிள் முதல், பைக், கார், லாரி, பஸ் என நீளும் பட்டியலில் விமானம் வரையிலான அனைத்து வாகனத்திற்கும் டயர் மிகவும் அவசியம். இதை பட்ஜெட் விலையில், சுலபமான முறையில் கண்டுபிடித்தவர் ஜான் பாய்டு டன்லப் (John Boyd Dunlop). இவர் ஸ்காட்லாந்தின் ட்ரெக்ஹார்னில் 1840-ம் ஆண்டு பிறந்தார். எடின்பரோ விலங்கியல் கல்லூரியில், விலங்கியல் அறுவை சிகிச்சை நிபுணராகத் தேர்வு பெற்றார்.

சரி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் ஏன் டயரை கண்டுபிடித்தார்?

டன்லப் தன் மகனுக்கு மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அதை ஆசையுடன் ஓட்டினான் மகன். கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று திரும்பியவனின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. மாறாக வேதனை தெறித்தது. எகிறி எகிறி குதித்து, ஒரு ஒழுங்கு இல்லாமல் கஷ்டப்பட்டு ஓட்டி வந்தான். அந்தக் காலத்தில் வாகன சக்கரத்தில் கெட்டியான ரப்பர் பொருத்தப்பட்டிருக்கும். அதனால்தான் மகன் சிரமப்படுகிறான் என்பதை உணர்ந்தார் டன்லப். அந்த சைக்கிள் சக்கரங்களில் மெல்லிய ரப்பர் ஷீட்டுகளை சுற்றினார். ஷீட்டுகளின் முனையை பசையால் ஒட்டி, அதனுள் காற்றை அடைக்க ஒரு சாதனத்தை வைத்தார். கால்பந்துக்கு காற்று அடைக்கப் பயன்படுத்தும் பம்ப்பை கொண்டு அதற்குள் காற்றடைத்தார். பிறகு அந்த சைக்கிளை ஓட்டச் சொன்னார். அதை அவருடைய மகன் எளிதாக ஓட்டினான்.

உற்சாகமான டன்லப், காற்றடைக்கப்பட்ட டயர் உருவாக்கும் முறையை மேம்படுத்தி, 1888-ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி அதை பதிவு செய்து காப்புரிமையையும் பெற்றார். காற்றடைக்கப்பட்ட டயர்களை உற்பத்தி செய்ய பெல்பாஸ்டில் ஒரு தொழிற்சாலையை நிறுவிய டன்லப், இரண்டு வருடங்கள் கழித்து மற்றொரு தொழிற்சாலையை பர்மிங்காமில் தொடங்கினார்.

டன்லப்புக்கு முன்பாகவே இதுபோன்ற டயரை ராபர்ட் வில்லியம் தாம்ஸன் என்பவரும் கண்டறிந்திருந்தார். அதற்கான காப்புரிமையை 1845-ல் பெற்றிருந்தார். டன்லப் தனது டயரை மக்களிடம் அறிமுகப்படுத்தியபோது, தாம்ஸன் எதிர்ப்பு தெரிவித்தார். தாம்ஸன் கண்டறிந்த முறையில் காற்றடைத்த டயரை உற்பத்தி செய்வது அதிகம் செலவு பிடிக்கும் காரியம். ஆனால், டன்லப் குறைந்த செலவில் உற்பத்தி செய்து மலிவான விலைக்கு டயரை விற்றதால் ஆதரவு பெருகியது.

மகத்தான இந்த கண்டுபிடிப்பின் மூலம் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய டன்லப், 1921-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி காலமானார். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அயர்லாந்து தனது 100 பவுண்டு பண நோட்டில் டன்லப்பின் உருவத்தை அச்சிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்