'பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்

உலக அளவில் இன்று இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Update: 2024-04-25 19:24 GMT

லக்னோ,


உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-


"நீங்கள் 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியின் தலைமை மீது வைத்த நம்பிக்கையின் பயனாக இன்று உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. நமது எல்லைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளன. பயங்கரவாதத்தில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது. மேலும் நாட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 


அரசின் நலத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைகின்றனர். உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அடிமைத்தனத்தின் மிச்சங்களை முற்றிலுமாக அழித்து, நமது கலாச்சாரத்தை மதித்து, சுயசார்புடைய, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 


அதே சமயம் காங்கிரஸ் கட்சி, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தைக் கொண்டிருக்கிறது. 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் நாட்டு மக்களை தொடர்ச்சியாக சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிரித்து வந்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு புதிய இந்தியா உருவாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்."


இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்