மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-31 11:38 GMT

டெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,

நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல் இது. நாம் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க.வை எதிர்கொள்ள முடியும். நமக்குள் நாமே மோதிக்கொண்டிருந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது.

இந்த தேர்தல் களத்தில் சமநிலை போட்டியில்லை. பிரதமர் மோடி மைதானத்தில் பள்ளம் தோண்டிவைத்துவிட்டு எதிர்க்கட்சிகளை அதில் கிரிக்கெட் விளையாடும்படி கூறுகிறார்.

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.வும் விஷத்தை போன்றது. அதை ருசிக்க வேண்டாம். அவர்கள் நாட்டை அழித்துவிட்டனர். அவர்கள் நாட்டை மேலும் அழிக்க அனுமதிக்கக்கூடாது. மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்