முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிப்புகள் வாங்கிய ராகுல்காந்தி - வைரல் வீடியோ
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இனிப்புகள் வாங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம் செய்தார். கேரளாவில் இருந்து இன்று மாலை திருநெல்வேலி வந்த ராகுல்காந்தி அங்கு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன்பின்னர், கேரளா சென்ற ராகுல்காந்தி மாலை விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராகுல்காந்தி பங்கேற்றார்.
இந்நிலையில், கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்குமுன் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட ராகுல்காந்தி சிங்காநல்லூரில் காரை நிறுத்தினார். பின்னர், காரில் இருந்து கிழே இறங்கிய ராகுல்காந்தி சாலையோரம் அமைந்திருந்த இனிப்பு கடைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி இனிப்புகள் வாங்கினார்.
ராகுல்காந்தி கடைக்குள் வந்ததை கண்டு இனிப்பு கடை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர், ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், இனிப்பு கடையில் இருந்து புறப்பட்ட ராகுல்காந்தி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல்காந்தி தான் வாங்கிய இனிப்புகளை அவரிடம் வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.