3-ம் கட்ட தேர்தல்: மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி

அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட ராணிப் வாக்கு சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

Update: 2024-05-07 03:42 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 2-வது கட்ட தேர்தல் 26-ந் தேதியும் நடந்தது. இரு கட்டங்களிலுமாக 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.

அடுத்ததாக 3-வது கட்ட தேர்தல் குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தனது சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ராணிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

முன்னதாக பிரதமர் மோடியை குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பிரதமர் மோடியிடம் காட்டிய போது, அதில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மக்கள் பலரும் பிரதமருடன் கைகுலுக்கினர். பல குழந்தைகளின் கையில் ஆட்டோகிராப் போட்டார்.

பிரதமர் மோடியை காண குழந்தைகள் உட்பட மக்கள் கூட்டம் குவிந்தது. பிரதமர் மோடி உடன் மக்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பின், ஓட்டுச்சாவடி அருகே, மக்கள் மத்தியில் ஓட்டளித்து விட்டேன் என கையில் இருந்த மையை பிரதமர் மோடி காட்டினார்.

அதன் பின், செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது:-

இன்று மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு. தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. வன்முறை இல்லாத தேர்தல் இது. சிறப்பாக பணியாற்றிய தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுகள். உலகின் ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது இந்தியாவின் தேர்தல் நடைமுறை. சுமார் 64 நாடுகளில் தேர்தல் நடைமுறை உள்ளது. அவையனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஜனநாயகத்தை கொண்டாடுவதை போல அமைந்துள்ளது இந்த ஆண்டு. நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும். வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து வாக்களித்த பின் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,

2024 மக்களவைத் தேர்தலில் வாக்களித்தேன். அனைவரும் அவ்வாறு செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்