பிரதமர் மோடியின் குடும்பம் இதுதான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
பா.ஜ.க.வின் 'வாஷிங் மெஷின்' பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க.வின் 'வாஷிங் மெஷின்' பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன.
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
"பேச நா இரண்டுடையாய் போற்றி" எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது. மோடியின் குடும்பம் என்பது 'அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. தான். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.