'ஒரே நாடு, ஒரே தலைவர்' என்பதே பிரதமர் மோடியின் நோக்கம் - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

‘ஒரே நாடு, ஒரே தலைவர்’ என்ற ஆபத்தான நோக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-11 11:17 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றைய தினம் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி, 'ஒரே நாடு, ஒரே தலைவர்' என்ற ஆபத்தான நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளிவிட வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

நாட்டில் உள்ள மிகப்பெரிய திருடர்களையும், கொள்ளையர்களையும் மோடி தனது கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறார். ஊழலை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதை கெஜ்ரிவாலிடம் இருந்து பிரதமர் மோடி கற்றுகொள்ள வேண்டும். எங்கள் கட்சியைச் சேர்ந்த மந்திரிகளையே ஊழல் வழக்கில் நாங்கள் சிறைக்கு அனுப்பியிருக்கிறோம்."

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்