நாடாளுமன்ற தேர்தல்; இந்திரா காந்தியை சுட்டு கொன்றவரின் மகன் பஞ்சாப்பில் போட்டி

2014-ம் ஆண்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.3.5 கோடி சொத்து உள்ளது என சரப்ஜித் சிங் தெரிவித்து உள்ளார்.

Update: 2024-04-11 13:17 GMT

சண்டிகார்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்றவர் பியாந்த் சிங். இவருடைய மகன் சரப்ஜித் சிங் கால்சா (வயது 45). நடைபெற உள்ள தேர்தலில் அவர் பஞ்சாப்பில் இருந்து போட்டியிடுகிறார்.

சரப்ஜித் சிங் இதற்கு முன்பு, 2014 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் முறையே பதேகார் சாஹிப் (தனி) மற்றும் பதிண்டா தொகுதிகளில் போட்டியிட்டார். எனினும், அவற்றில் வெற்றி பெறவில்லை. 2019-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்நிலையில், இந்த முறை பரீத்கோட் (தனி) தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் 2014-ம் ஆண்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.3.5 கோடி சொத்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

1989-ம் ஆண்டு சரப்ஜித் சிங்கின் தாயார் பிமல் கவுர், ரோபர் தொகுதியில் இருந்தும், தாத்தா சுச்சா சிங் பதிண்டா தொகுதியில் இருந்தும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவருடைய மெய்க்காப்பாளர்களாக இருந்த பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகிய இருவரும் அவருடைய வீட்டில் வைத்து, துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்