நாடாளுமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு

கேரளா, கர்நாடகா உள்பட 89 தொகுதிகளில் நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

Update: 2024-04-25 14:12 GMT

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. தேர்தல் களத்தின் முதலாவது கட்டம் மற்றும் மிகப்பெரிய சுற்று கடந்த 19-ந்தேதி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், 2-ம் கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (7), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

கேரளாவில் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 194 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். தேசிய அளவில் காங்கிரசின் முகமாக இருக்கும் ராகுல் காந்தி, நாளைய தேர்தலில் நட்சத்திர வேட்பாளர் ஆவார்.

ராஜஸ்தானில் முதற்கட்ட தேர்தலில் 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 13 இடங்களுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 152 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 2 மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மாநில தலைவர் என முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில் ஏராளமான முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர், தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண் கோவில், கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், மாநில முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் சுரேஷ்கோபி, கேரள முன்னாள் முதல்-மந்திரி ஏ.கே.அந்தோணி மகன் அனில் அந்தோணி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த தேர்தலில், அந்தந்த வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்பே பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு விட்டன. அந்த மையங்களுக்கு உரிய அதிகாரிகளும் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு முறைப்படி அனுப்பப்பட்டு உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்