'எதிர்கட்சியினருக்கு தங்கள் வாரிசுகளைப் பற்றி மட்டும்தான் கவலை' - அமித்ஷா விமர்சனம்

எதிர்கட்சியினரால் ஏழை மக்களையோ, நாட்டின் எல்லைகளையோ பாதுகாக்க முடியாது என அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2024-04-11 18:08 GMT

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஷ்ணு தத் சர்மாவை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"காங்கிரஸ் கட்சி சுமார் 70 ஆண்டுகளாக சாதி அரசியல், வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஆகியவற்றை சார்ந்து நாட்டை ஆட்சி செய்தது. அதே சமயம் பா.ஜ.க. அரசு இளைஞர்கள், அடித்தட்டு மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் கவனம் செலுத்தியது.

மராட்டிய மாநிலத்தில் சரத் பவார் தனது மகளை முதல்-மந்திரியாக்க முயல்கிறார். உத்தவ் தாக்கரே அவரது மகனையும், மு.க.ஸ்டாலின் அவரது மகனையும் முதல்-மந்திரியாக்க முயன்று வருகின்றனர். சோனியா காந்தி தனது மகனை பிரதமராக்க முயற்சி செய்து வருகிறார்.

தங்கள் குடும்பத்தினருக்காக உழைத்து வருபவர்கள் இளைஞர்களின் நலன் பற்றி சிந்திப்பார்களா? பெண்கள், விவசாயிகள் அல்லது ஏழைகள் பற்றி நினைப்பார்களா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஓ.பி.சி. சமுதாயம் மிகவும் பாதிக்கப்படும். பா.ஜ.க.வில் 37 சதவீத மந்திரிகள் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

எதிர்கட்சியினரால் ஏழை மக்களையோ, நாட்டின் எல்லைகளையோ பாதுகாக்க முடியாது. அவர்களுக்கு தங்கள் வாரிசுகளைப் பற்றி மட்டும்தான் கவலை. அதேவேளை, பிரதமர் மோடியின் முழு கவனமும் மக்களுக்கு சேவை செய்வதில்தான் இருக்கிறது."

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்