சட்டம் போட்டு ஊழல் செய்வது எப்படி? உலகத்துக்கே காட்டிய ஊழல்தான் தேர்தல் பத்திரம் - கனிமொழி தாக்கு
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றனர் என்று தி.மு.க., எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை,
தென்சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி திருவான்மியூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது மக்களுக்காக என்று கூறுகிறார்.அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பா.ஜ.க.,வில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேட்பாளராக நிற்கிறார். சட்டம் போட்டு ஊழல் செய்வது எப்படி என பிரதமர் மோடி உலகத்துக்கே காட்டிய ஊழல்தான் தேர்தல் பத்திரம். திடீரென பிரதமருக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை வந்துள்ளது. இந்தியாவே, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினைதான் பின்பற்றி வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றன.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ரூ.500 குறைக்கப்படும். பெட்ரோல் விலை குறைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் 2-வது இடத்தில் அ.தி.மு.க.,தான் வரும். பா.ஜ.க. நோட்டாவுக்கு கீழேதான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.