நான் ஊழலுக்கு எதிரான போராடுகிறேன், அதனால்தான் ஊழல் செய்தவர்கள் சிறையில் உள்ளனர் - பிரதமர் மோடி

நான் ஊழலுக்கு எதிரான போராடுகிறேன், அதனால்தான் ஊழல் செய்தவர்கள் சிறையில் உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2024-03-31 14:39 GMT

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும் பிரதமருமான மோடி பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

நாங்கள் ஊழலுக்கு எதிரான போராடுகிறோம் என்பதை கடந்த 10 ஆண்டுகளாக நாடு பார்த்துள்ளது. ஏழைகளிடமிருந்து பணத்தை இடைத்தரகர்கள் திருடுவதை நாங்கள் தடுத்துள்ளோம். நான் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன், அதனால்தான் ஊழல் செய்தவர்கள் இன்று சிறையில் உள்ளனர்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஊழலுக்கு எதிராக போராடுகிறது. ஆனால் மற்றொரு கூட்டணி (காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி) ஊழல் செய்தவர்களை காப்பாற்ற போராடுகிறது. இந்தியா கூட்டணி விவசாயிகளை வெறுக்கிறது. ஊழல் செய்தவர்கள் குறித்து நான் விசாரணை மட்டும் செய்யவில்லை, நாட்டு மக்களிடமிருந்து யார் கொள்ளையடித்தாலும் அவர்களிடமிருந்து கொள்ளையடித்ததை மீட்டு மக்களிடமே திருப்பி கொடுப்பேன் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

3வது முறை ஆட்சியமைக்க எங்கள் அரசாங்கம் ஏற்கனவே தயாராகி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஆட்சியமைந்த உடன் அடுத்த 100 நாட்களில் எடுக்கவேண்டிய முக்கிய முடிவுகள் தொடர்பாக ஏற்கனவே பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி வெறும் டிரைலர்தான் இனி நாம் நாட்டை மேலும் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்