இந்தியாவை வலிமையற்ற நாடாக மாற்ற 'இந்தியா' கூட்டணி விரும்புகிறது - பிரதமர் மோடி

இந்தியாவை வலிமையற்ற நாடாக மாற்ற ‘இந்தியா’ கூட்டணி விரும்புகிறது என பிரதமர் மோடி விமர்சித்தார்.

Update: 2024-04-12 15:10 GMT

Image Courtesy : ANI

ஜெய்ப்பூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு, இந்தியாவை ஒரு வலிமையற்ற நாடாக மாற்ற 'இந்தியா' கூட்டணி விரும்புகிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். முன்னதாக 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள், ரசாயண மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தியாவின் பிரிவினைக்கு முக்கிய காரணமான முஸ்லிம் லீக்கின் ஸ்டாம்ப் இருந்தது. தற்போது 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த மற்றொரு கட்சி, நாட்டிற்கு மிகவும் ஆபத்தான ஒரு வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் அணு ஆயுதங்களை அழித்து விடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. நமது இரண்டு அண்டை நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கும்போது, நமது அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டுமா? ஒருபுறம் பா.ஜ.க. அரசு இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதற்காக உழைக்கிறது. மறுபுறம் 'இந்தியா' கூட்டணி இந்தியாவை வலிமையற்ற நாடாக மாற்ற விரும்புகிறது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்